இந்த நாட்டின் எதிர்கால தலைவர்கள் பிள்ளைகளே என தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் கௌரவ. மனோ கணேசன் அவர்கள் குறிப்பிடுகிறார். சில அரசியல்வாதிகள் நாட்டின் எதிர்காலம் பிள்ளைகள் மற்றும் இளைஞர்கள் என குறிப்பிட்டாலும் அவர்கள் எக்காலத்திலும் அரசியலில் இருந்து ஒதுங்க போவதில்லை என அமைச்சர் குறிப்பிட்டார். ஆக, அவர்கள் கதிரையை விட்டு எழும்பாதவிடத்து பிள்ளைகளுக்கு எவ்வாறு வாய்ப்பு ஏற்படும்? எவ்வாறு நாட்டை பொறுப்பேற்பார்கள்? எனவே நாட்டை பொறுப்பேற்க முடியாமையினால் அரசியலில் இளைஞர்கள் ஜனநாயகமற்ற முறையில் அதிகாரத்தை பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றனர் என அமைச்சர் குறிப்பிட்டார். அது தென் பிரதேசத்திலும் வட பிரதேசத்திலும் இடம்பெற்றதாக அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி பதவியேற்று இரண்டாவது ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு, கல்வி அமைச்சின் 1/2015 சுற்றறிக்கையின் பிரகாரம் பாடசாலைகளில் மொழி மேம்பாட்டு வட்டங்களை தாபிப்பது தொடர்பாக அரசகரும மொழிகள் ஆணைக்குழு ஏற்பாடு செய்திருந்த விழிப்பூட்டல் நிகழ்ச்சித்திட்டத்தில் அண்மையில் அமைச்சர் மனோ கணேசன் கலந்து கொண்ட போதே இவ்வாறு தெரிவித்தார்.

 தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன் அவர்கள்,...

“எனக்கு அவ்வளவு வயது இல்லாவிட்டாலும் நான் இந்த அரசியலில் நீண்ட காலம் இருக்க விருப்பமில்லை. இருக்க போவதுமில்லை. இன்னும் கொஞ்சம் பொறுங்கள், அமைச்சில் கொஞ்சம் காலங்கள் இருங்கள் என மக்கள் கூறும் போது நான் அரசியலில் இருந்து வெளியேறிவிடுவேன். காரணம் இந்த பிள்ளைகளுக்கு எதிர்காலத்தை வழங்க வேண்டும். அப்போதுதான் நாட்டை சரி செய்ய முடியும். புதிய தலைமுறை ஆட்சிக்கு வரும் போதுதான், ஆட்சியை நடாத்தும் போதுதான் புதிய சிந்தனைகள் ஆட்சியில் உள்வாங்கப்படும். எனக்கு வாக்களித்தார்களா இல்லையா என்பது எனக்கு முக்கியமில்லை. ஏனென்றால், நான் வேலை செய்யும் அமைச்சர். ஏனென்றால் இந்த நாட்டை நாம் பிளவுப்படாத, இறைமையுள்ள நாடாக கட்டியெழுப்ப தீர்மானித்துள்ளோம். அதுதான் எங்கள் பயணம். எமக்கு தெரியும் நாங்கள் வரலாற்றில் விட்ட தவறுகள் எவை என்று. சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்கள் தவறுகள் செய்தனர். சிங்கள, தமிழ் மொழி பேசும் தலைவர்கள் தவறு விட்டனர். சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களுக்கு உரிமைக்கோரும் தலைவர்கள் தவறுகள் செய்துள்ளனர். எனவே நாம் பின்நோக்கி பார்த்து தவறு விட்ட இடங்களை திருத்தி முன்னோக்கிச் செல்வோம். எனவே, நாம் நாட்டை பின்நோக்கி நகர்த்துவதற்கு இடமளிக்க மாட்டோம். இடமளிக்கவும் முடியாது.

இந்த நாட்டில் வாழும் போது நாங்கள் சிங்களவராயினும், தமிழராயினும், பௌத்தர்களாயினும், இந்துவாயினும், கத்தோலிக்கர்களாயினும் பிரச்சினைகள் எதுவும் இல்லை. தாய் மொழி தமிழாயினும் சிங்களமாயினும், அல்லது ஆங்கிலமாயினும், இனம் சிங்களமோ தமிழோ முஸ்லிமோ முதலிடத்தை இலங்கையர்கள் என்ற வகையில் நாட்டிற்கே வழங்க வேண்டும். இலங்கையர்கள் என்ற அடையாளத்திலேயே எமது தனித்துவம் உள்ளது. எங்கள் சமயம், எங்கள் மொழியும் அதிலேதான் உள்ளன. கடந்த காலங்களில் நாம் என்ன செய்தோம். இலங்கையர்கள் என்பதை இரண்டாவது அல்லது மூன்றாது இடத்தை வழங்கி முதலாவது இடத்தை எமது மொழிக்கு, இனத்திற்கு மற்றும் சமயத்திற்கு வழங்க முற்பட்டோம். அங்குதான் நாம் தவறு விட்டுள்ளோம். சிலர் தேசம், நாடு என்பவற்றுக்கு இடத்தினை வழங்க வில்லை. எனினும் இந்த நாட்டில் மூன்று மொழிகள் காணப்படுகின்றன. அது அரசியலமைப்பில் இருக்கின்றது. சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகள் அரசகரும மொழிகள். அதேபோல் ஆங்கில மொழி இணைப்பு மொழியாகும். அதேபோல் பௌத்தம், இந்து, இஸ்லாம் மற்றும் கத்தோலிக்கம் என்ற நான்கு மதங்கள் காணப்படுகின்றன.  இனங்கள் பற்றி பேசுவோமானால் பொதுவாக நாங்கள் குறிப்பிடும் சிங்களம், தமிழ், முஸ்லிம் சில நேரம் நாங்கள் மலே என்பவை பற்றி மாத்திரமே குறிப்பிடுவோம். எனினும் எனது அமைச்சில் உள்ள தரவுகளின் படி எமது நாட்டில் 19  இனங்கள் வாழுகின்றன. புத்தளம் பகுதியில் ஆபிரிக்க வம்சாவளியை கொண்டவர்கள் வாழுகின்றார்கள். வேடர்கள் இருக்கின்றார்கள். அதில் இரண்டு வகை. காட்டில் வாழும் வேடர்கள் மற்றும் கடல் பிரதேசத்தில் வாழும் வேடர்கள். மலையாளம் மற்றும் தெலுங்கு மக்களும் இருக்கின்றார்கள். ஒல்லாந்து மக்களில் மூன்று வகையினர் இருக்கின்றார்கள். அதேவேளை இந்த நாட்டில் பல்வேறு மொழிகளை பேசும் 9 இனக்குழுக்கள் இருக்கின்றன. இவ்வாறு பல மொழிகளில் பேசப்படுதல் ரம்மியமானது. அந்த பல்வகைமைதான் எமது சக்தியாகும்.

சிங்கள மொழியை தாய் மொழியாக கொண்ட எழுபத்தைந்து சதவீதமான மக்கள் இந்த நாட்டில் வாழுகின்றார்கள். அது மாற்றப்பட முடியாதது. பௌத்த மதத்தை பின்பற்றுபவர்கள் எழுபது சதவீதம் காணப்படுகின்றனர். அதுவும் மாறப் போவதில்லை. அதனை மாற்ற யாருக்கும் அவசியமும் இல்லை. அதேவேளை ஏனைய மதங்கள், இனங்கள், ஏனைய மொழிகளை பேசும் மக்களும் வாழ்கின்றனர். இந்த அனைவரும் ஒன்றிணைந்தே இலங்கை உருவாகிறது. எனவே பிள்ளைகள் இதனை விளங்கிக் கொள்ள வேண்டும். பெரியவர்களை திருத்துவது கடினம். எனவே தான் பிள்ளைகள் எமக்கு பெறுமதி மிக்கவர்கள். எனது இனம், எனது மொழி, எனது மதம் என்பனவற்றுக்கு நான் இரண்டாம், மூன்றாம், நான்காம் இடம்தான் வழங்கியுள்ளேன். அவற்றுக்கு முதலாம் இடத்தை வழங்க மாட்டேன். அதனால் எனது இனம், மதம் மற்றும் மொழி தொடர்பாக உரிமைகோருபவர்கள் குற்றம்சாட்டினால் நான் அவற்றை பொருட்படுத்த மாட்டேன். நான் முதலிடத்தை இலங்கையர் என்ற விடயத்திற்கே வழங்குவேன். அவ்வாறு நினைத்தால்தான் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும். அதனை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். உடைவுற்ற நாட்டை தீவிரவாதம் அல்லது பயங்கரவாதம் அல்லது பிரிவினைவாதம் வியாபித்திருந்த நாட்டை நாம் பிள்ளைகளுக்கு உருவாக்கத் தரமாட்டோம். எங்கள் ஜனாதிபதி, பிரதமர், எமது அமைச்சரவை, அல்லது எங்கள் அரசாங்கம் அதற்கு தயார் இல்லை. சிலர் இன்றும் தீவிர வாதத்தை துண்டுகின்றார்கள். அவ்வாறனவர்கள் தெற்கிலும் இருக்கின்றார்கள். வடக்கிலும் இருக்கின்றார்கள். தமிழ் அடிப்படைவாதிகள் இருக்கின்றார்கள். சிங்கள அடிப்படைவாதிகளும் இருக்கின்றார்கள். முஸ்லிம் அடிப்படைவாதிகளும் இருக்கின்றார்கள்.

அவ்வாறானவர்களை நாம் துச்சமாக மதிக்கின்றோம். வடக்கு மற்றும் தெற்கு அடிப்படைவாதம் பேசுபவர்களிடம் நாம் கோரிக்கையொன்றை விடுக்கின்றோம். அந்த கோரிக்கை என்ன தெரியுமா, நாட்டை சீரழிக்காது கடலில் அல்லது ஆற்றில் பாய்ந்து தங்களை மாய்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். ஏனெனில் எமக்கு நாடு வேண்டும். இந்த பிள்ளைகளுக்கு நாடு இருக்க வேண்டும். அண்மையில் ஹம்பந்தொட்டையில் ஒரு பெரிய அமலித்துமலி இடம்பெற்றுள்ளது. எனினும் பெரிய பிரச்சினையொன்று அங்கு இடம்பெறவில்லை. சிலர் இல்லாத பிரச்சினைகளை உருவாக்கப் பார்க்கின்றார்கள். எங்கள் ஜனாதிபதி, பிரதமர், எங்கள் அரசாங்கம் என்ன செய்ய எதிர்பார்க்கிறது, அங்கு கைத்தொழில்மயப்படுத்த எதிர்பார்க்கின்றது. அந்த கைத்தொழில்மயப்படுத்தல் நாட்டிற்கு அவசியம். ஏனென்றால் கல்வி கற்ற பிள்ளைகளுக்கு தொழில்வாய்பை பெற்றுக் கொடுக்க வேண்டும். கைத்தொழில்மயப்படுத்தல் என்பது அதுதான். இலட்சக்கணக்கில் எமக்கு தொழில் வாய்ப்புகள் அவசியம். இல்லையெனில் நாட்டை நாம் எப்படி முன்னேற்ற முடியும். தொழில்வாய்ப்புகள் இருக்குமாயின் வருமானம் உயரும். அவ்வாறு வருமானம் அதிகரிக்குமாயின் நாடு முன்னேற்றம் அடையும். நான் இதற்கு முன்னரும் குறிப்பிட்டுள்ளேன், ஹம்பந்தொட்டைக்கு அக் கைத்தொழில்மயப்படுத்தல் தேவையில்லை என்றால் கொழும்புக்கு தரச்சொல்லி.

கொழும்பு, கொலன்னாவ, மஹரகம, ஹோமாகம மற்றும் அவிஸ்சாவல்ல என்ற பகுதிகளில் அதற்கு தேவையான அளவு காணிகள் உள்ளன. கைத்தொழில் பேட்டைகளை அமைக்க முடியும். அவ்வாறு கைத்தொழில் பேட்டைகளை அமைத்து அதனூடாக தொழில் வாய்பை பெற்றுக் கொடுக்க முடியும். அதனால் பயம் கொள்ள தேவையில்லை. நாம் நாட்டை விற்கமாட்டோம். நாட்டை பிளவடைய செய்யவும் மாட்டோம். நாம் நாட்டை யாரும் விற்பதற்கு வாய்பை வழங்கவும் மாட்டோம். இந்த அச்சுறுத்தல்களுக்கு அச்சமடையும் அரசாங்கம் அல்ல எமது அரசாங்கம். நான் அச்சுறுத்தல்களுக்கு பயப்பட மாட்டேன். எவருக்கும் தலை சாய்க்க மாட்டேன். மதகுருமார்களுக்கு மாத்திரமே தலைசாய்ப்பேன். நாட்டில் புதிய தலைமுறைக்கு, இளைஞர் தலைமுறைக்கு நாடு பற்றி உணர்வை ஏற்படுத்த வேண்டும். நான் அந்த நிலைப்பாட்டில்தான் இருக்கின்றேன். எனக்கு முடியாத ஒன்றை நான் யாருக்கும் கூற மாட்டேன்.

அதேபோல் சிங்களவர்கள் தமிழையும் தமிழர்கள் சிங்களத்தையும் கற்க வேண்டும் என்பதை குறிப்பிட விரும்புகின்றேன். அதேபோல் நாம் அனைவரும் இணைந்து ஆங்கில மொழியையும் கற்றுக் கொள்ள வேண்டும். உலகிற்கான திறவுகோள் ஆங்கில மொழிதான். எமது நாட்டில் சில தலைவர்கள் இருந்தார்கள். அவற்றில் சிங்கள தலைவர்கள் சாதாரண பிள்ளைகளுக்கும் சிங்கள மக்களுக்கும் சிங்களத்தை மட்டும் கற்றுக் கொள்ள சொன்னார்கள். அதேபோல் வடக்கில் உள்ள தமிழ் தலைவர்கள் தமிழ் பிள்ளைகளுக்கும் மக்களுக்கும் தமிழை மட்டும் கற்கச் சொன்னார்கள். அந்த தலைவர்கள் அவ்வாறு குறிப்பிட்டு விட்டு அவர்களின் பிள்ளைகளை வெளிநாட்டிற்கு, அதாவது அமெரிக்கா, இங்கிலாந்துக்கு அனுப்பினார்கள். அவர்களுக்கு ஆங்கில மொழியில் கற்பதற்கு பெரிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். இதனால்தான் இந்த நாட்டில் மத்தியதர வர்க்கத்தினருக்கு ஆங்கில மொழி புலமை இல்லாமல் போனது. ஆதனால் அந்த பிழையை மீண்டும் செய்ய முடியாது.

அனைவரும் ஆங்கில மொழியை கற்க வேண்டும். உலகிற்கான திறவுகோள் அதுதான். தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் என்ற வகையில் மொழிசார் கல்வியை மேம்படுத்தல் எனது பொறுப்பாகும். இப்பொறுப்பு கல்வி அமைச்சருக்கு மாத்திரம் உரித்தான பொறுப்பல்ல. அது என்னுடைய பொறுப்பும்தான். சிங்களம், தமிழ், ஆங்கிலம் மொழிகள் மாத்திரமல்ல ஜப்பான், கொரியா, பிரென்ச், சீன மொழிகள் என்ற சர்வதேச மொழிகளை கற்பதனை மேம்படுத்தும் புதிய வேலைத்திட்டத்தை எதிர்காலத்தில் எமது அமைச்சு முன்னெடுக்கும். எனது இலக்கு அதுதான். மொழிக் கல்வி, ஆங்கில மொழி கற்றல் குறிப்பிட்ட மேட்டுக் குடியினருக்கும் மாத்திரம் வரையறுக்கப்பட்டிருந்ததை நிலையை இப்போது நாம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம்.

சமீபத்திய செய்திகள்

இந்த நாட்டில் பல்வேறு மொழிகளை பேசும் இனங்கள் 19 காணப்படுகின்றன. இவ்வாறு பல்வேறு மொழிகள் பேசுகின்றமை ரம்மியமானது. பல்வகைமைதான் எமது சக்தி - தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் கௌரவ. மனோ கணேசன் அவர்கள்

08 ஏப்ரல் 2017

இந்த நாட்டின் எதிர்கால தலைவர்கள் பிள்ளைகளே என தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் கௌரவ. மனோ கணேசன் அவர்கள் குறிப்பிடுகிறார். சில அரசியல்வாதிகள்...

கௌரவ. அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் கொழும்பில் நிகழ்த்திய உரை

08 ஏப்ரல் 2017

இந்நாட்டின் பிள்ளைகளின் கல்வி மட்டத்தை மேம்படுத்துதல் அனைத்து மக்கள் பிரதிநிதிகளினதும் கடமையாகும். - தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் கௌரவ. மனோ கணேசன்...

இலங்கையர் என்ற அடையாளத்தின் கீழ் வாழும் அனைவரையும் ஒன்றிணைப்பதுதான் எனது கடமை - தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் கௌரவ. மனோ கணேசன்

09 ஏப்ரல் 2017

தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் என்ற வகையில், அரசகரும மொழிகள் என்ற விடயப்பரப்பு தொடர்பாகவும் சகவாழ்வு மற்றும் கலந்துரையாடல் என்ற விடயப்பரப்பு தொடர்பாகவும்...