தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் என்ற வகையில், அரசகரும மொழிகள் என்ற விடயப்பரப்பு தொடர்பாகவும் சகவாழ்வு மற்றும் கலந்துரையாடல் என்ற விடயப்பரப்பு தொடர்பாகவும் விளக்கத்தைப் பெற்றுக் கொள்ளவும், கற்றுக் கொள்வதற்கும் கடந்த காலங்களில் சந்தர்ப்பம் கிடைத்தது என்பதை முதலில் குறிப்பிட வேண்டும். நாட்டில் வாழும் பல்வேறு இனங்கள், பல்வேறு மொழிகளை பேசும் குழுக்கள், பல்வேறு சமயங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுக்கள் என்ற எல்லோரும் இலங்கையர் என்ற அடையாளத்தின் கீழ் வாழும் அனைவரையும் ஒன்றிணைத்தல்தான் எனது கடமை. தேசிய சகவாழ்வு என்பது அதுதான். இந்த நாட்டில் மூன்று மொழிகள் உள்ளன. நான்கு சமயங்கள் உள்ளன. இருபது இனக் குழுக்கள் வரை வாழ்கின்றன. அதுதான் பல்வகைமை. எனவே, பல்வகைமை என்பது எமது பலவீனமல்ல. பல்வகைமை என்பது எமது பலம் என்ற தொலைநோக்கை நாம் உருவாக்கியுள்ளோம். அத்தோடு கலந்துரையாடலும் மிகவும் முக்கியமானது. கடந்த காலங்களில் நாம் துப்பாக்கி, துப்பாக்கி இரவைகள், அத்துடன் வன்முறைகள் ஊடாகவே உரையாடினோம். அதனால் இந்த யுகத்தில் அவற்றுக்கு சந்தர்ப்பத்தினை கொடுக்காது அவற்றை துடைத்தெறிய வேண்டியுள்ளது. அதிமேதகு ஜனாதிபதி அவர்களும் கௌரவ பிரதமர் அவர்கள் ஆகியோரின் வழிகாட்டலில் அதனை நாம் துடைத்தெறிந்துள்ளோம். எனவே, தற்போது சூரியனுக்கும் சந்திரனுக்கும் கீழுள்ள எந்தவொரு பிரச்சினையையும் நாம் கலந்துரையாடல் மூலம் கருத்தாடி தீர்த்துக் கொள்ள முடியும்.

அத்தோடு மூன்றாவது விடயமாக அரசகரும மொழிகள் கொள்கை முக்கியத்துவமிக்கதாகும். அந்த வகையில் தற்போதுள்ள அரசியலமைப்புக்கு அமைவாக சிங்கள மற்றும் தமிழ் மொழி என்பன அரசகரும மொழிகளாகவும் ஆங்கில மொழி இணைப்பு மொழியாகவும் காணப்படுகின்றது. ஆங்கில மொழி என்பது வேற்று மொழி அல்ல என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும். அதுவும் இந்த நாட்டின் மொழியாக உள்ளது. எனவே, குறிப்பாக இந்த நாட்டின் இளம் சமுதாயத்திற்கு தமிழர்களுக்கு சிங்கள மொழியையும் சிங்களவர்களுக்கு தமிழ் மொழியையும் அத்துடன் அனைத்து பிரஜைகளுக்கும் இளைய சமூகத்துக்கு ஆங்கில மொழியை கற்பித்தல் எனது பொறுப்பாக உள்ளது. அதேவேளை பாடசாலைகளில் ஆங்கிலம் கற்பதற்கு அதிக கவனம் செலுத்தப்படும் வகையில் தொழில்சார் முறையில் ஆங்கில மொழி பற்றிய கற்பித்தலை வழங்குதலும் எனது பொறுப்பாகும். ஏனென்றால் ஆங்கில மொழியானது நாட்டில் உள்ள பல்வேறு இனத்தவரிடையே இணைப்பு மொழியாக அரசியலமைப்பு ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழியை மறந்து விட்டு, தனது தாய் மொழியை மட்டும் கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு தங்களின் பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி ஆங்கில மொழியில் கற்பித்த அரசியல்வாதிகள் இந்த நாட்டில் இருந்தனர். எனினும் இந்த யுகம் இப்போது முடிவடைந்தள்ளது. அதனால் தற்போதுள்ள எமது தலைவர் ஜனாதிபதி அவர்கள், பிரதமர் அவர்கள் அப்படி கூறுவதில்லை. அவர்கள் எதிர்காலத்தை பற்றியே சிந்திக்கின்றனர்.

இதனால் இவர்கள், எதிர்காலத்தில் வரவுள்ள தேர்தல்களை பற்றி சிந்திக்காது எதிர்கால சந்ததியினரை பற்றி சிந்திக்கின்றனர். 2017ஆம் ஆண்டு மொழிக் கொள்கை தொடர்பாக எனது கண்ணோட்டம் என்னவெனில் அரசகரும மொழிகள் கொள்கையை அமுல்படுத்தல் ஊடாக அதனை நாட்டின் தேசிய பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒரு முன்ணோட்டமாக இருக்கும் என்பதாகும். எனவே இனங்களுக்கிடையில், மொழிகளுக்கிடையில் கருத்தாடல் மூலமாக கடந்த காலங்களில் இந்த நாட்டில் தேசிய பிரச்சினையை தீர்த்தல் தொடர்பாக பல்வேறு முயற்சிகள் இருந்தன.

1956ஆம் ஆண்டு பண்டாரநாயக்க அவர்களும் செல்வநாயகம் அவர்களும் முயற்சித்தனர். அறுபதுகளில் டட்லி அவர்கள் முயற்சித்தார். அதன் பின்னர் ஜே.ஆர். ஜெயவர்தனா அவர்களும் பிரேமதாசா அவர்களும் முயற்சித்தனர். சந்திரிக்கா அம்மையார் முயற்சித்தார், ரணில் விக்கிரமசிங்க அவர்கள் முயற்சித்தார். இறுதியாக முன்னால் ஜனாதிபதி ராஜபக்ச அவர்களும் முயற்சித்தார். இந்த கலந்துரையாடல்கள் தோல்வியுற்றன. இதற்கு காரணம் தலைவர்கள் மேல் மட்டத்தில் பேசிக் கொண்ட போதும் தள மட்டத்தில் சாதாரண மக்களிடத்தில் இது தொடர்பில் தெளிவு இருக்கவில்லை. அது தொடர்பாக இருந்த தெளிவின்மை காரணமாக இரு பக்கங்களிலும் இருந்த சிங்கள, தமிழ் தீவிர போக்குடையவர்கள் உட்பட தீவிர போக்குடைய முஸ்லிம்களும் இந்த நாட்டின் சாதாரண மக்களை பிழையான வழியில் நடத்தி சென்றனர். இதனால் இப்போது அதற்கு இடமளிக்க மாட்டோம். கீழ் மட்டத்தில் இருந்து கலந்துரையாடல்களை முன்னெடுக்க வேண்டும். கலந்துரையாடல் என்பது அதுதான். எனவே, நாடுபூராகவும் நாங்கள் சகவாழ்வு சங்கங்களை ஏற்படுத்துவோம். முரண்பாடான நிலைமைகள் உருவாகும் போது அதில் தலையிட்டு இனம், மதம், மொழி பேதமின்றி இலங்கையர் என்ற அடையாளத்தை முன்னிருத்தி தீர்வுகளை வழங்கி நாட்டின் பிரதான பிரச்சினைகயின் போது அவற்றை தலைவர்கள் மட்டும் தீர்ப்பதற்கு சந்தர்ப்பத்தினை வழங்காது கீழ் மட்டத்தில் கலந்துரையாடுவதே இந்த சங்கங்களின் பொறுப்பாகும். இளைஞர்கள், அரச உத்தியோகத்தர்கள், கலைஞர்கள், மதத் தலைவர்கள், ஓரங்கட்டப்பட்டுள்ள மக்கள் குழுக்கள், பெண்கள் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல்களை நாம் மேற்கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இந்த வருடத்தில் இக் கருத்திட்டத்தை வேகமாக முன்னெடுப்போம்.

அதேவேளை இந்த நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் அன்றாட கடமைகளை மேற்கொள்ளும் தம் தாய் மொழியிலேயே அரச நிறுவனங்களில், அலுவலகங்களில் தமது கடமைகளை மேற்கொள்ளும் நிலையை ஏற்படுத்தல் எனது இலக்காகும். அந்த வகையில் சிங்கள பிரஜைகள் தென் பகுதியில் இருந்து வடக்கு - கிழக்கு பகுதிக்கும் மத்திய மலைநாட்டிலும், அரசாங்க அலுவலகங்களுக்கு சென்று தமிழ் உத்தியோகத்தர்கள் ஊடாக தங்கள் மொழியில் வேலைகளை செய்வதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கவும், தமிழ் பிரஜைகள் தென் முனைக்கு சென்று தங்களின் தாய் மொழியில் அனைத்து அரச நிறுவனங்களிலும் சிங்கள உத்தியோகத்தர் ஊடாக தங்களின் சேவைகளை பெற்றுக் கொடுக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்தலும், அரசகரும மொழிகள் அமைச்சர் என்ற வகையில் எனது இலக்காகும். நான் அதனை செய்வேன். அத்தோடு நாட்டின் உள்ள எல்லா பெயர் பலகைகளையும் மூன்று மொழியிலும் இருத்தல் வேண்டும். அரச அலுவலகங்களில் மாத்திரமன்றி தனியார் நிறுவனங்களும் மூன்று மொழிகளிலும் இருக்க வேண்டும். அதேபோன்று நான் தனியார் துறையிலும் மூன்று மொழியிலும் இருக்க வேண்டும் என நான் அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன். இதனால் மும்மொழியிலும் பிழையின்றி சரியாக குறித்த பெயர் பலகைகள் அமைய வேண்டும். அதனூடாக அரச நிறுவனங்களில் மற்றும் அரச அலுவலகங்களில் உள்ள ஆவணங்கள் அனைத்தும் மூன்று மொழிகளிலும் காணப்படுதல் வேண்டும். அதேவேளை அனைத்து அரச அலுவலகத்திலும் சிங்கள மற்றும் தமிழ் மொழிபெயர்ப்பாளர்களை நியமிப்பேன். ஏற்கனவே ஆய்வுகளை செய்துள்ளோம். அவ்வாறான மொழிபெயர்ப்பாளர்கள் 2600 அதிகமானவர்கள் தேவையாக உள்ளனர். தேவையான மொழிபெயர்ப்பாளர்களை இணைப்பதற்காக அமைச்சரவை விஞ்ஞாபனத்தை தயாரித்து அமைச்சவையின் அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கைளை விரைவில் ஆரம்பிக்கப்படும்.

ஏற்கனவே நாம் மொழிபெயர்ப்பாளர்களுக்கு பயிற்சி வழங்க ஆரம்பித்துவிட்டோம். மொழிக் கொள்கை முறையாக அமுல்படுத்தப்படாமையினால், நாம் மீண்டும் மொழிக் கொள்கையை அமுல்படுத்தி எல்லா இடங்களிலும் உள்ள பெயர் பலகைகளை மூன்று மொழிகளிலும் தயாரிக்கும் செயற்பாட்டை ஆரம்பிக்கவுள்ளோம். இதனூடாக நாட்டில் எந்த நிறுவனத்திலும் பெயர் பலகைகளில் ஏதாவது பிழைகள் இருப்பின் அதனை திருத்துவதை நாம் மேற்கொள்வோம். அந்த பெயர் பலகைகளை நாமே பொருத்துவோம். எனினும் அதனை பொருத்துவதற்கு முன்னர் நிறுவனத்தின் தலைவருக்கு நாம் அறிவிப்போம். அதனை மேற்கொள்வதற்கான அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவைக்கு விஞ்ஞாபனத்தை சமர்ப்பித்து அனுமதியைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுப்பேன். அந்த அதிகாரத்தை ஜனாதிபதி அவர்களும் பிரதமர் அவர்களும் எனக்கு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

அந்த வகையில் மொழிபெயர்ப்பாளர்களை உருவாக்கி நாட்டில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்கள், குடிவரவு குடியகல்வு திணைக்களம், அடையாள அட்டை வழங்கும் திணைக்களம், மாவட்ட செயலயகங்கள், கிராம உத்தியோகத்தர் காரியாலயம், வலய கல்வி பணிப்பாளர் அலுவலகம், வைத்தியசாலைகள் உள்ளிட்ட பொது மக்கள் தொடர்பு கொள்ளும் அரச நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கி செயற்படுத்தப்படும். 2017ஆம் ஆண்டுக்கான திட்டம் அதுவே ஆகும். அந்த வகையில் இந்த வருடம் அதனை அமுல்படுத்திய பின்னர் அடுத்த வருடம் ஆகின்ற போது அதன் இலக்கினை அண்மிக்க முடியும். இதனூடாக இலங்கையர் என்ற அடையாளத்தினுள் பல்வகைமை எமது பலமே, இலங்கை எமது தேசம் என்ற அடிப்படையில் சமாதானம், மகிழ்ச்சி, சகவாழ்வுடன் வாழும் சுபீட்சமான இலங்கையை கட்டியெழுப்புவது எனது நோக்கமாகும்.

சமீபத்திய செய்திகள்

இந்த நாட்டில் பல்வேறு மொழிகளை பேசும் இனங்கள் 19 காணப்படுகின்றன. இவ்வாறு பல்வேறு மொழிகள் பேசுகின்றமை ரம்மியமானது. பல்வகைமைதான் எமது சக்தி - தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் கௌரவ. மனோ கணேசன் அவர்கள்

08 ஏப்ரல் 2017

இந்த நாட்டின் எதிர்கால தலைவர்கள் பிள்ளைகளே என தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் கௌரவ. மனோ கணேசன் அவர்கள் குறிப்பிடுகிறார். சில அரசியல்வாதிகள்...

கௌரவ. அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் கொழும்பில் நிகழ்த்திய உரை

08 ஏப்ரல் 2017

இந்நாட்டின் பிள்ளைகளின் கல்வி மட்டத்தை மேம்படுத்துதல் அனைத்து மக்கள் பிரதிநிதிகளினதும் கடமையாகும். - தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் கௌரவ. மனோ கணேசன்...

இலங்கையர் என்ற அடையாளத்தின் கீழ் வாழும் அனைவரையும் ஒன்றிணைப்பதுதான் எனது கடமை - தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் கௌரவ. மனோ கணேசன்

09 ஏப்ரல் 2017

தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் என்ற வகையில், அரசகரும மொழிகள் என்ற விடயப்பரப்பு தொடர்பாகவும் சகவாழ்வு மற்றும் கலந்துரையாடல் என்ற விடயப்பரப்பு தொடர்பாகவும்...